Thursday, November 8, 2018

‘மக்கள் எழிச்சியுற்றால், சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியுறும்’


‘மக்கள் எழிச்சியுற்றால், சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியுறும்’
    கடந்த 25 - குறிப்பாக 10 - ஆண்டுகளாக, சமூகஅரசியல் ஆர்வலர்கள் செய்துவரும் தீவிர மற்றும் இடைவிடா முயற்சியினால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளோம். மக்கள், மதுக்கடைகளை தகர்த்தெறிவதிலும், நீர் நிலைகள், நீர்வழிகளை தாமே முன்வந்து தூர்வாரி, சீர்செய்வதிலும், இயற்கைப் பேரிடர்களின் போது, மீட்பு, மீளமைப்புப் பணிகளில் ஈடுபடுவதிலும், அரசியலாரிடமும், அதிகாரிகளிடமும் தாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதை வெளிப்படுத்தி வருகின்றனர்.     
    மக்கள் ஆட்சியதிகாரம் பெருவதில் அடுத்த கட்டமாக, மக்கள் குரல் ஆட்சிமன்றங்களில் ஒலிக்கச் செய்ய வேண்டியுள்ளது. மக்கள் இப்போது ஆட்சிப் பொருப்புக்களை ஏற்கத் தயாராகி விட்டனர். ஆயினும் சரியான வழிகாட்டுதல் இல்லாவிடின் புதிய ஆர்வலர்களில் பலர், புதிய அரக்கர்களாக, அராஜகக்காரர்களாக, அவதாரமெடுத்து தற்போதைய ஊழல், அராஜக கலாசாரத்தையே தொடர்வது உருதி. தவிர இந்த மக்களின் எழுச்சி திசை மாறி, சமூகப் பிளவு சக்திகள் மற்றும் வன்முறையாளர்களிடம் சிக்கும் அபாயத்தையும் தவிர்க்க வேண்டியுள்ளது.
    ‘மேலிருந்து கீழாய்’ செயல்படும் அரசியல் அமைப்பு, சர்வாதிகாரமெனும் பெருத்த அபாயத்தை விளைவிக்க வல்லது. ஆதலால் ஆட்சி அதிகாரத்தில் பெருமளவில் மக்களின் பங்கேற்பை ஏற்படுத்தி, இந்தப் புதிய ஆர்வத்தை, உந்தலை, சமுதாயம் மேம்படப் பயன்படுத்த வேண்டும்.
    அதிகாரம் படைத்தவர்கள் தங்களுக்கெதிரான சட்ட மாற்றங்களை தாங்களே கொண்டு வருவார்கள், தங்களைத் தாங்களே எரித்துக்கொள்ளும் ‘பஸ்மாசுரர்களாக’ இருக்க வேண்டும் என்று, எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? தற்குறி, தான்தோன்றி அரசியல் கட்சித் தலைவர்கள் நியமிக்கும் வேட்பாளர்கள் அவர்களுக்குத்தான் - அவர்களின் ஊழல்களிலும் அராஜகத்திலும் - ப்ரதிநிதியாக செயல்பட முடியுமேயன்றி, நமக்கல்ல. நமக்கு ப்ரதிநிதியாக செயல்பட, நாமேதான் நம் வேட்பாளர்களை தேர்வுசெய்ய வேண்டும்.
    ஊழல், நிர்வாகக்குறைபாடு, என்று கூவியுயோ, தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தோ, தேர்தல் முறைகளை குறை கூறியோ, சட்ட மாற்றங்கள் வேண்டிப் போராடியோ, இனி எந்தத் தீர்வும் கிடைக்காது. அவை மூலம் தான் மக்களிடம் தேவையான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடிந்துள்ளது. அவை தேவையான செயல்களே, ஆயினும் போதுமானதல்ல.
    நாம் நேர்மையானவர்களை களமிறக்கியும் பார்த்துவிட்டோம். அவர்கள் பெரும்பாலும் தம்மைத்தாமே நியமித்துக் கொண்டவர்கள் அல்லது மிகச் சிறிய குழுக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். மக்கள் அவர்களை ஏற்கவில்லை. அவர்களை மக்களால் சொந்தம் கொண்டாட முடியவில்லை. மக்கள் தெரியாத ‘தேவதையைவிட தெரிந்த பேயையே’ ஏற்கின்றனர். 
    மக்களிடம் எங்களுக்கு, எங்கள் நியமனங்களுக்கு, வாக்களியுங்கள் என்று ஆர்வலர் குழுக்களும், சிறிய நேர்மையான அரசியல் கட்சிகளும் கேட்பதை விடுத்து, உங்கள் வேட்பாளர்களை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்றால், அவர்களும் அந்த வேட்பாளர்களை சொந்தம் கொண்டாடி வெற்றியடையச் செய்வார்கள். எப்படியும் அவர்களும் சமூக ஆர்வலர்களைத்தான் தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம். அவர்கள் தேர்வு நாமாக இருப்பின் ‘கடமையின் அழைப்பாக’ க் கருதி, ஏற்று நற்பணி ஆற்றுவோம். இல்லையெனினும் நம் சுயநலமற்ற பணிகளைத் தொடருவோம். நாம் எப்படியும் அரசியல் செய்ய, அரசியலில் காலடி எடுத்து வைக்க வில்லையே? அரசியலை நேர்படுத்த, சீர்படுத்த, மேம்படுத்த, முறைப்படுத்த, தூய்மைப்படுத்த, புதுப்பிக்க, புதுப்பொலிவூட்டத் தானே முனைந்துள்ளோம்?
    பல அடுக்குகளில் ‘மக்கள் மன்றங்கள்’ அமைத்து அவர்களை தங்கள் வேட்பாளர்களை தாங்களே தேடி, தெரிந்தெடுத்து, நியமித்து, தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். ‘தெரு மக்கள் மன்றம்’ – 150 – 250 வாக்காளர்களுக்கானது – 50 – 75 வீடுகளில் வசிப்பவர்கள் – அமைத்து, அவர்களின் ப்ரதிநிதியாக அந்த பகுதியில் (தெருவில்) வசிக்கும் நேர்மையான, எந்த வேறூன்றிய கட்சியையும் சாதவராக, மொந்தைக் குடியனாக அல்லாத, பொது ப்ரச்னைகளில் தன்னால் முடிந்ததை செய்யத் தயாராக உள்ள ஒருவரை தேர்வு செய்து, அடுத்த – ‘ஏரியா மக்கள் மன்றத்திற்கு’ (1,500 – 2,500 வாக்காளர்கள்) - 10 தெ ம ம ப்ரதிநிதிகள் கொண்டது - அனுப்பவேண்டும். அவர்கள் ஒரு ப்ரதிநிதியை பெரிய ஏரியா மன்றத்திற்கும் (15,000 – 25,000 வாக்காளர்கள்) - 10 ஏ ம ம ப்ரதிநிதிகள் கொண்டது - அவர்கள் ப்ரதிநிதியை சட்ட மன்றத்தொகுதி மக்கள் மன்றத்திற்கும் (150,000 – 250,000 வாக்காளர்கள்) - 10 பெ ஏ ம ம ப்ரதிநிதிகள் கொண்டது - அவர்கள் ப்ரதிநிதியை நாடாளுமன்ற மக்கள் மன்றத்திற்கும் (15 லக்ஷம் வாக்களர்கள்), தேர்ந்து அமர்த்த வேண்டும். இந்த மன்றங்கள் தங்களுக்குள் மேலும் கீழுமாகக் கலந்தாய்ந்து 3 அடுக்கு அட்சி மன்றங்களுக்கும் தங்கள் வேட்பாளர்களை நியமிக்க வேண்டும்.
    இன்றைய நிலையில், நல்லாட்சி ஏற்பட சட்ட மாற்றங்கள் தேவை என்பது ஒரு தலைகீழ் சிந்தனை. நல்லாட்சி ஏற்பட்டால்தான் தேவையான சட்ட மாற்றங்களையே கொண்டுவரமுடியும். மேற்கண்ட முறையை ஏற்படுத்த எந்த சட்ட மாற்றமோ சீர்திருத்தமோ தேவையில்லை. இதை செய்துவிட்டால் நாம் தேவை என்று தற்போது கருதும் பல சட்ட மாற்றங்களும் தேவையற்றுப் போய்விடும். மேலும் தேவையான வற்றை ஏற்படுத்துவது மிகவும் எளிதாகிவிடும்.  
    இது பல இடங்களில் நிகழத் துவங்கி விட்டது. இதை ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று விடாமல், எல்லா இடங்களிலும் நடக்க வைப்பதுதான் நம் கடமை. மக்கள் இந்த மாற்றத்தை இருகரம் நீட்டி வரவேற்கத் தயாராக உள்ளனர். தங்கள் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் தாங்களும் பங்காற்ற முடியும் என்ற உணர்வு, அவர்களை சொந்தம் கொண்டாட வைத்து, வெற்றிப் பாதையில் நடத்திச் செல்லும்.
    ஆர்வலர் குழுக்கள், சேவைக் குழுக்கள், என்ஜீஓக்களின் செயல் வீரர்கள், தீவிர செயல்பாடுகள் மூலம், நாட்டின் 95 கோடி வாக்காளர்களுக்கு இந்த செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும். அதுவும் 2019 இல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள். பல சட்ட மன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களும், நடக்க விருக்கின்றன.
    அரசியல் நிலைமை மிக மோசமாக உள்ள நிலையில், ஏதோ ஒரு சில தொகுதிகளில் முயன்று விட்டு, பிறகு எல்லா இடங்களிலும் செய்ய முனையலாம் என்று கருத முடியவில்லை. நாம் திரண்டுவர இன்னும் ஐந்தாண்டு காலம் காத்திருக்க முடியாது. தற்போதைய அரசியல் சீரழிவு ரக்தப் புற்று நோய்க்கு சமம். அது வில்லை உட்கொண்டோ, களிம்பு பூசியோ தீரக்கூடியதல்ல. முழு ரக்தமாற்றுச் சிகித்சைதான் தீர்வு.
    தேர்தல் முடிவுகள் எப்படியிருப்பினும், இந்த மன்றங்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் நலப்பணி யாற்றத் துவங்கலாம். மன்றப் பரதிநிதிகள் அதிகாரிகளிடம் மக்கள் ப்ரச்னைகளை எடுத்துச்செல்ல அதிகாரம் பெற்றவராகிவிடுவர். இந்த மன்றங்கள் சட்டபூர்வ அதிகாரம் பெற பதிவு செய்து, முறைப்படுத்தி விடலாம். இந்த மன்றங்களின் தொகுப்பு, நிழல் ஆட்சிமன்றங்களாகவே செயல் படும். இவர்களுக்கு செவிமடுக்காமல் எந்த அரசாலும் இம்மியும் பயணிக்க முடியாது. இதில் ஆட்சிமன்ற உருப்பினர்களை திரும்ப அழைக்கும் உறிமையும், அரசின் திட்டங்கள், சட்டங்களுக்கு மக்களின் அங்கீகாரத்தை கணிக்கும் வசதியும் உபரிப் பெருமானம்.  
    ஆர்வலர் குழுக்கள், சேவைக் குழுக்கள், என்ஜீஓக்கள் எல்லாம் கூடி செயல் பாட்டை துவங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பலராலும் மதிக்கப்படும் பெரியோர்களை, சாதனையாளர்களை வழிகாட்டிக் குழுவாக அமைத்து, பரவலான ஏற்பு, மற்றும் பண்புள்ள முரையில் இப்பேரியக்கத்தை கொண்டு செல்ல முடியும்.
    பொருப்புள்ள, செவிமடுக்கும், மறியாதைக்குறிய, ஆட்சி அமைந்தால் நாம் தினம்தோரும் தெருவில் வந்து போராட வேண்டியிருக்காது.      
    ‘மக்கள் எழுச்சியுற்றால், சாம்ராஜ்யங்கள் கூட சாய்ந்துவிடுகிறது’. ‘அரசியல்வாதிகள் ஒன்றும் வெல்ல முடியாதவர்களல்ல’.
ராஜ ராஜன்
(A technologist by qualification, farmer by option and a Gandhian by conviction)
காந்தீய சமுதாய மேம்பாட்டு முனைப்பு
தொ பே: 94441 60839,     மின் அஞ்சல்: letsbelldcat@gmail.com
முகநூல்: Raja Rajan K,    ப்ளாக்: prithvi-mithra.blogspot.in

No comments:

Post a Comment