தீய அரசியலிலிருந்து, தூய
அரசியலுக்கு
இன்று
நாம் அனுபவித்துவரும் எல்லா துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் முக்கிய காரணம்
அரசியலில் நேர்மையின்மை. முன்னணி அரசியல் குற்ற உணர்வின்றி, ஊழல்வாதிகள்,
குற்றவாளிகள், ஜாதி மத வாதிகள், வாரிசு அரசியல் வாதிகள் நிறைந்ததாக, அளவற்ற பேராசை
பிடித்தவர்களின் தலைமையில், ஜனநாயகத்தையும், மக்கள் நல ஆட்சிமையையும் மிகுந்த
சேதத்திற்கு உள்ளாக்கி வருகிறது. அரசியல் அதிகாரம் ஒரு சில தண்டல்காரர்களிடமும்,
வழிப்பறிக் கொள்ளைகாரர்களிடமும் சிக்கி, நாடே சின்னாபின்னமாகி வருகிறது.
போட்டியிடும் பெரும்பாலும் நேர்மையற்ற, சுயநலமிகள், தம்மையே பெருமைபடுத்திக்
கொள்வோருக்குள்ளேயே ஒருவரை தேர்ந்தெடுக்க, மக்களை கட்டாயப் படுத்திவிட்டு, பண
மூட்டைகளும், வியாபார முதலைகளும், அவர்தம் கைக்கூலிகளும் தங்களுக்கு அடிமை செய்யக்
காத்திருக்கும் ஆமாம் சாமிகளை, ஃஜீபூம்பாக்களையே எல்லா ஆட்சி மன்றங்களுக்கும்,
நிர்வாகத்திலும் நியமித்து பொது சொத்தையெல்லாம் சூரையாடி, அவற்றை சொந்த
சொத்தாக்கிக் கொண்டும், பிற்காலத்திற்கான அரசியல் முதலீடாக்கியும் வருங்கின்றனர்.
தாங்களே
ஜனநாயக மரபுப்படி தேர்ந்தெடுக்கப்படாத கட்சித் தலைவர்களால் நியமிக்கப்பட்ட,
அவர்களுக்கு அடிமை செய்யும் தகுதியைத் தவிர வேறேதும் தகுதியற்ற, வேட்பாளர்கள்,
மக்களின் பிரதிநிதிகளாக எப்படி செயல்பட முடியும். அந்தத் தலைமைக்கும், அவர்
பின்னின்று ஆட்டிவைக்கும் பண முதலைகளுக்கும் தான் பிரதிநிதிகளாக செயல்பட
முடிகிறது.
தற்போதைய மோசமான நிலைமையிலிருந்த மீள ஒரு அவசர
அறுவை சிகித்சை தேவைப்படுகிறது. களிம்பு பூசியோ, வில்லை உட்கொண்டோ தீரக்கூடிய
வியாதியல்ல இது. நாடு ஒரு மனித உடல் என்று கொண்டால், அரசியல் அதில் ஓடும் குருதி
எனலாம். அது முழுவதுமாக புற்றுநோய்வாய் பட்டிருக்கும் வேளையில் முழு ரக்த மாற்று
சிகித்சைதான் நோயாளியை காக்கவல்லது.
நாட்டு நிலைமையைப் பற்றிப் பேச ஆரம்பித்த உடன்
‘தேர்தல் முறை, நீதித்துறை, காவல்துறை சீர்திருத்தங்கள், லோக் பால், லோக் ஆயுக்தா,
திரும்பி அழைக்கும் உரிமை, மக்கள் கருத்தறியும் உரிமை’ எல்லாம் கொண்டு வரவேண்டும்
என்று சமூகஅரசியல் ஆர்வலர்கள் பெரிய பட்டியலை நீட்டுகிறார்கள். இவைகளின் மீது
கட்டுக்கட்டாக பரிந்துரைகள் அரசு பெட்டகங்களில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்து
கிடக்கின்றன. ஊழலில் ஊறிக்கிடக்கும் அரசியல் வியாதிகளுக்கு எதிரான சீர்திருத்தங்களை
அவர்களே நடை முறைபடுத்துவர் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மக்கள் நலம்
பேணும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் வென்று ஆட்சி மன்றங்களுக்குச் சென்றாலன்றி
இவை சாத்தியமாகாது? சொல்லப் போனால் உண்மையான மக்கள் பிரதிநிதிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டால், அதன் பின் இப்போது தேவை என்று கருதப்படும் பல
சீர்திருத்தங்கள் தேவையற்றே போய்விடும்.
மக்கள் நலம் விரும்பும் ஆர்வலர்களும்,
குழுக்களும் நேர்மையானவர்களை தேர்தலில் போட்டியிட நியமித்தும், ஒன்றிணைந்து பொது
வேட்பாளர்களை நியமித்தும் முயன்றுவிட்டோம். இருப்பினும் மக்கள் அவர்களை சட்டை செய்வதில்லை.
ஆர்வலர் குழுக்களுக்கும், சிறிய பிரபலமடையாத ஆனால் நேர்மையான கட்சிகளுக்கும்
மக்களிடையே செல்வாக்கு மிகக் குறைவாக உள்ளது. அவர்களின் வேட்பாளர்கள் பெரிய
வாக்காளர்கள் குழுக்கள் மூலம் தேர்வு செய்யப் படுவதில்லை. முடிவெடுக்கும் சிறு
குழுக்களும் பெரும்பாலும் அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதில்லை. வாக்காளர்கள்
இந்த வேட்பாளர்களை சொந்தம் கொண்டாட முடிவதில்லை. ஆக நேர்மையாளர்களை தேர்ந்தெடுத்து
ஆட்சிமன்றங்களுக்கு அனுப்பும் நம் கனவு குறைப்ரசவமாகவே இருந்துவருகிறது. நம் வேட்பாளர்களுக்கு
வாக்களியுங்கள் என்று கேட்பதை விடுத்து, நாம் வாக்காளர்களையே வேட்பாளர்களை தேர்வு
செய்ய ஊக்குவித்தால் அவர்கள் வெல்வது உறுதியாகும்.
நாம் தேர்ந்தெடுத்து அனுப்புவோர் அரசியல் தண்டல்காரர்களுக்கும்,
கயவர்களுக்கும் அல்லாமல், நமக்குப் பிரதிநிதியாக செயல்படுவதை உறுதிசெய்ய,
மக்களாகிய நாம் பல அடுக்குகளிலும் குழுக்களாகக் கூடி, நமக்குள்ளேயே தகுதியான
பேராசை பிடித்தவரல்லாமல், நேர்மையானவர்களை தேடி, தேர்வு செய்து, நியமித்து, தேர்ந்தெடுத்து
ஆட்சிமன்றங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அப்படி செய்தால், அது ஒரு
பிரதிந்தித்துவ ஜனநாயகமாக மட்டும் அல்லாமல் ஒரு பங்கேற்பு ஜனநாயகமாகவும்
செயல்படும். நம் ஜனநாயகம் மேன்மையடைந்து ஆட்சியும் நிர்வாகமும் பெருத்த நல்
மாற்றத்தை அடையும். பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை மற்றும்
திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் மக்களின் கருத்தை கணிக்கும் வாய்ப்பையும் உள்ளடக்கியதாக
செயல்படும். மொத்தத்தில் ஆட்சி அதிகாரம் மக்கள் கையில் வந்தடையும். இந்த ஆட்சிமுறை
மாற்றத்தை ஏற்படுத்த, எந்த சட்டத் சீர்திருத்தமும் தேவை இல்லை.
இந்த மக்கள் ஆட்சியதிகாரம் பெறும் முறையை
ஏற்படுத்த தெரு மக்கள் மன்றம் அமைத்து அடுத்த கட்டத்துக்கான – ஏரியா மன்றத்துக்கான
- பிரதிநிதியை தேர்வு செய்து, இதேபோல் முறையே உள்ளாட்சி வார்ட், சட்டமன்றத்
தொகுதி, நாடாளு மன்றத்தொகுதி மக்கள் மன்றங்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளை
அமர்த்தி மேலும் கீழும் கலந்தாய்ந்து மக்கள் வேட்பாளர்களை எல்லா தளத்திற்கும்
நியமிக்க வேண்டும். இதில் தேர்வுசெய்யப்படுவோர் எந்த வேரூன்றிய கட்சியையும் சாராதவராக,
ஊழல் வாதியாக அல்லாமல் – நேர்மையானவராக – சமுதாயத்திற்கு தம்மால் ஆனதை செய்யத்
தயாரானவராக, மொந்தைக்குடியனாக அல்லாதவராக இருப்பது மிக அவசியம். ஜாதி, மதம், இனம்,
கல்வி, சொத்து முதலியன தகுதியாக
ஏற்கப்படக்கூடாது.
நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம், ‘வாக்காளர்களே
கூடி, தேடி, தெரிந்தெடுத்து, நியமித்து தேர்ந்தெடுப்பதன் மூலம், அரசியல்
கயவர்களின் பிரதிநிதிகளுக்கு மாற்றாக, மக்களின் உண்மையான பிரதிநிதிகள் ஆட்சியில்
அமர்வதன் அவசியத்தையும், அவசரத்தையும்’ பரவ செய்ய வேண்டும்.
இன்று ஆர்வலர்கள் பலர் பொதுப் பிரச்சினைகளை
கையிலெடுத்துப் போராடிவருகின்றனர். மேற்கண்ட மாற்றம் – நேரடி, அடிப்படை, பங்கேற்பு
ஜனநாயகம் - ஏற்பட்டு விட்டால் – அதாவது ஜனநாயகத்தின் உண்மை தத்துவத்தை நடைமுறைப் படுத்தினோமேயானால்,
மற்ற பல பிரச்சினைகளுக்கும் தாமாகவே தீர்வு ஏற்படும். எப்படியும், மக்கள்
மன்றங்கள் ஆட்சிமன்றங்களை, நிர்வாகத்தை கண்காணித்து, முறைப்படுத்த எப்போதும் தயார்
நிலையில் இருக்கும்.
இந்த செய்தியை நாடெங்கிலும் எடுத்துச்செல்ல
அனைத்து சமூகஅரசியல் ஆர்வலர் குழுக்கள், சேவைக்குழுக்கள், என்ஜீஓக்கள் எல்லாம் இதில்
ஈடுபட வேண்டும். இந்தக் குழுக்களெல்லாம் மற்ற குழுக்களின் மீது நம்பிக்கை இல்லாதிருப்பதனால்,
அவர்கள் ஒன்றிணையத் தேவையும் இல்லை. துவக்கத்தில் கை கோத்துப் பயணித்தால் போதும்.
நாளடைவில், குழுக்கள் ஒன்றோடொன்றாக இணைந்து, மக்கள் மன்றம் என்ற ஒன்றோடு
ஐக்கியமாகிவிடும்.
என்னுடைய
சிறிய அனுபவத்தில் மக்கள் இதை இரு கரம் நீட்டி ஏற்கத் தயாராக உள்ளனர் என்பதை
உறுதியாகக் கூற முடியும். தடைகள் இல்லாமல்
இல்லை. கை நீட்டிப் பணம் வாங்கிய பின் எப்படி அவர்களுக்கு வாக்களிக்காமல் இருப்பது
என்று கேட்கின்றனர். வோட்டுக்கு பணம் பெருவது சட்ட விரோதம் மட்டுமல்ல, மஹாபாவமும்
கூட என்று புரிய வைக்க வேண்டியுள்ளது. அதனால் விளையும் தீமைகளை விளக்கி. ‘கை
நீட்டி பணம் பெற்றிருந்தால் கூட, அவர்களின் இந்த தீய செயலினால், அவர்களை நமக்குப்
பிடித்திருந்தால் கூட, அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது’ என்று விளக்க
வேண்டியுள்ளது. அவர்கள் ‘குழந்தைகளின் தலையில் கையை வைத்து சத்தியம்
வாங்குகிறார்கள். சத்தியத்தை எப்படி மீறுவது’ என்று அடுத்த கணையை வீசுகிறார்கள்.
அவர்களுக்கு ‘அப்படி சத்தியம் செய்வது தவறு. ஆனால் அவர்களைக் கண்டு பயந்து செய்ய
நேரிட்டால், நாம் மனதில் நினைக்கும் சத்தியத்தைத்தான் கடை பிடிக்க வேண்டுமே தவிர,
உதடு சொல்வதை அல்ல. மனதில் ‘நீ எங்களை ஏமாற்றப்பார்க்கிராய். என் வாக்கு உனக்கல்ல
என்று கூறி, உதட்டால் உனக்குத்தான் அளிப்பேன்’ என்று கூறுங்கள். அப்படியும்
கூறியதை மீற அஞ்சினால், நோடாவுக்கு அளித்தோ, வாக்கு அளிக்காமலோ மன சத்தியத்தை
அனுசரியுங்கள்’ என்று கூற வேண்டியுள்ளது.
மஹாத்மா காந்தி பிரிட்டன் ஒரு வலியசக்தி.
அவர்கள் களத்திலேயே, அவர்களைப் போலேயே ஆயுதம் தாங்கி, எதிர்த்து வெல்வது சாத்தியமல்ல
என்று உணர்ந்து, சத்தியாக்ரஹம் என்ற வெல்ல முடியாத ஆயுதத்தை படைத்தார். இன்றைய
அரசியல் கயவர்களும் மிக சக்தி வாய்ந்தவர்கள்தாம். அவர்களை அவர்கள் களத்திலேயே,
அதுவும் அவர்கள் பீரங்கியும், ஏவுகணையும் கொண்டு தாக்க, நாம் வில் அம்பு, ஈட்டி
தாங்கி எதிர்கொள்ள முடியாது. நமக்கு சத்யாக்ரஹம் போன்ற சர்வ வல்லமை வாய்ந்த ஆயுதம்
தேவைப்படுகிறது. அதுதான் மக்களே ‘கூடி, தேடி, தெரிந்தெடுத்து, நியமித்து,
தேர்ந்தெடுக்கும்’ முறையில் ‘ஆட்சி அதிகாரம் பெறுவது’.
மக்களுக்கு இதை எடுத்துரைப்பதும், அவர்களுக்கு
இப்படி செய்ய உதவுவதும் தான் சமூகஅரசியல் ஆர்வலர்களும்,
சிறு நேர்மைவாத கட்சிகளும் ஆற்றவேண்டிய உண்மையான கடமை. எப்படியும் நாம் அரசியலுக்கு
அரசியல் செய்ய வரவில்லையே. அரசியலை நேர்படுத்த, சீர்படுத்த, மேம்படுத்த, தூய்மைப்படுத்தத்தானே
வந்துள்ளோம்.
மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு சிலகாலமாக
அதிகரித்து வருகிறது. மதுக்கடைகளை மூட வைக்கும் முயற்சி, அணுமின் நிலையங்கள்
போன்றவற்றை எதிர்ப்பது, நீர்நிலைகளை தாங்களே முன் வந்து தூர்வாருவது, வெள்ளம்,
புயல் சமயங்களில் தாங்களாகவே முன் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபடுவது என்று
அவர்கள் அரசியல் வியாதிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதை தெள்ளத்தெளிவாக
வெளிப்படுத்துகின்றனர். இது வரும் காலங்களில் இன்னும் பல அரசியல் கட்சிகள் தோன்றவும்,
சுயாச்சையாக பலரும் தேர்தல் களத்தில் குதிக்கவும் வழிவகுத்துள்ளது. ஆனால்
இவர்களுக்கெல்லாம் களத்தில் வெல்லத் தேவையான செல்வாக்கு கிடையாது. மற்றும்
அவர்களுக்குள்ளேயே போட்டியும் பொறாமையும் சேர்ந்து, இந்த அரசியல் கோலியத்துக்களை
அசைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடம் சென்று ‘எனக்கு வாக்களியுங்கள்’,
‘எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்டுப் பயனில்லை என்பதை
அனுபவத்தில் உணர்ந்துள்ளோம். அவர்களோ ‘தெரியாத தேவதையைவிட தெரிந்த பேயே மேல்’ என்றே
முடிவெடுக்கிறார்கள். அவர்களையே அவர்களின் வேட்பாளர்களை தேர்வு செய்ய அறிவுறுத்துவதன்
மூலம் நாம் எப்படிப்பட்ட கோலியத்தையும் வீழ்த்த முடியும். இதுதான் ஆர்வலர்களின்
சரியான பயனளிக்கக்கூடிய செயலாக இருக்கும். எப்படியும் அவர்களும் சமூக
ஆர்வலர்களைத்தான் தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம். ‘அவர்கள் தேர்வு நாமாக இருப்பின்,
கடமையின் அழைப்பாக ஏற்று பணியாற்றுவோம். நாமாக இல்லையெனினும் அவர்கள் தீர்ப்பை
ஏற்று அவர்களுடன் இணைந்து நற்பணிகளில் நம் பயணத்தை தொடருவோம் என்ற தெளிவு’
ஏற்படவேண்டும்.
இதன் செயலாக்கத்தில் பல ஆர்வலர் குழுக்கள், பணிகளை
துவக்கி வீறுநடை போட்டு வருகின்றனர். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் துவங்கி,
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதை செய்ய முனைந்து வருகின்றனர். பல
இடங்களில் ஆர்வலர்கள் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்தத்
தறிகெட்டுச் சென்று கொண்டிருக்கும் அரசியலை கட்டுக்குள் கொண்டுவர இச்செய்தியை
நாடுமுழுவதும் பரவச்செய்ய அனைத்து ஆர்வலர்களின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை.
இது வெறும் பகல் கனவல்ல. மஹாராஷ்ட்ராவில் நக்சல்
தீவிரவாதத்தின் உறைவிடமான காட்சிரோலி மாவட்டத்திலேயே மக்கள் உள்ளாட்சி
மன்றங்களுக்கு தங்கள் பிரதிநிதிகளை தாங்களே தேர்ந்தெடுத்து ஒரு புரட்சியையே
செய்துள்ளனர். நக்சல் பாதிப்புக்குள்ளான இடத்திலேயே இதை செய்ய முடிந்தால் மற்ற
இடங்களில் ஏன் முடியாது. இன்னும் பலவிடங்களிலும் நடந்து வருகின்றன. ஆனால் இதை
அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுவிடாமல் அனைத்து இடங்களிலும் நடக்கச் செய்ய
வேண்டியது நம் கடமை.
நம்
உரிமையை தறிகெட்ட அரசியலாரிடமிருந்து மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
By K. Raja Rajan
[A technologist by qualification, farmer by option and
Gandhian by conviction]
Gandhian Initiative for Social
Transformation,
Cell: 94441 60839, E mail: letsbelldcat@gmail.com,
Blog: prithvi-mithra.blogspot.in, Face book: Raja Rajan. K
No comments:
Post a Comment