Tuesday, December 6, 2022

 

சுபீக்ஷத்தை நோக்கிய ஒரு பயணம்

2012 ஆம் ஆண்டு எழுதியது

            சில மாதங்களாக உணவுப் பொருள்களின் விலை வெகுவாக உயர்ந்து விட்டது என்று புலம்பி வருகின்றனர் உண்ண மட்டும் தெரிந்தவர்கள். ஆனால் 5, 10, 20 ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் மற்ற பொருட்களின் சராசரி விலை எற்றத்தை விட மிகக் குறைவாகவே உள்ளதை உணர முடியும். கடந்த 20 ஆண்டுகளாய் நமது அரசியல் வியாதிகள் நடத்திவரும் பொருளாதாரப் புரட்சி எனும் வெறியாட்டத்தால் கிராமீயப் பொருளாதாரம் இன்று சீர் குலைந்து, நிலை குலைந்து நிற்கிறது. இந்தக் கொள்கை மாற்றத்தின் தாக்கத்தால் கடந்த 20 ஆண்டுகளில் மூன்று லக்ஷத்திற்கும் மேற்பட்ட வேளாண்மக்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கின்றனர். 1991 ஆம் ஆண்டு நரசிம்ஹ ராவ் ஆட்சியில் மன்மோஹன் சிங்க் கொண்டு வந்த உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைதான் இதற்கு முக்கிய காரணம். இந்தக் கொள்கையினால் 35 கோடி நடுத்தர வர்கத்தினரின் வருவாய் பெருகியுள்ளது என்று மார் தட்டிக் கொள்கிறார்கள். 3 லக்ஷம் வேளாண்மக்களை படுகொலை செய்து அவர்களின் உடல் மீது ஏரித்தான் 35 கோடி மக்கள் முன்னேற்றம் காண வேண்டுமா? இந்தக் கொள்கையினால் உள்ளவர்கள் அதிகம் உள்ளவர்கள் ஆனார்கள், இல்லாதவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள் ஆனார்கள். மொத்தத்தில் இன்று உலகில் அழிந்துவரும் இனங்களில் வேளாண் துறையினரும் அடங்குவர். பொருளாதார ஏற்ற தாழ்வு ஒரு பிளவாகி இப்போது ஒரு பெரிய அகழியாகிவிட்டது.  

    2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு செய்தி – தீவிர வாதத்தினால் அந்த ஆண்டில் 350 பேர் இந்தியாவில் பலியானதாகக் கூறியது. ஆனால் விவசாயிகளோ ஆண்டுக்கு 17000 பேர் தற்கொலை செய்து கொண்டு மாண்டு வருகின்றனர். இது 1991 இல் இருந்து தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. ஆண்டுக்கு 350 பேரை கொல்லும் தீவிரவாதிகளை விட 17000 பேரை பலி வாங்கும் கொள்கையை உருவாக்கி செயல் படுத்தும் அரசியல் வியாதிகளைக் கண்டு தான் பயப்பட வேண்டி இருக்கிறது. இதில் காங்க்ரெஸானாலும் சரி பீஜேபியானாலும் சரி, எல்லாம் ஒரே மாதிரியான மக்கள் விரோதக் கொள்கையையே பின்பற்றுகின்றன. அவர்களில் பெயரைத்தவிர ஒன்றும் வேறுபாடு கிடையாது.

    விலை விவரத்தை பார்த்தால் உணவுப் பொருட்களின் விலை உயர்வு வேளாண் இடுபொருட்களின், மற்றும் செலவீனங்களின் விலை உயர்வை விட மிகக் குறைவாகவே உள்ளது விளங்கும். பொன்னி அரிசி 1994 இல் ரூ 12 விற்றது, 2008 இல் 23 தான் விற்றது. தற்போதுதான் 40 ஐ எட்ட முயன்று வருகின்றது. அரசே பணவீக்கம் 8 - 10% ஆக உள்ளதாகக் கூறி வருகின்றது. ஆனால் சராசரியாக பணவீக்கம் 10% திற்கு மேல் தான் உள்ளது. இந்த 18 ஆண்டுகளில் விலைவாசி 100 இலிருந்து 556 ஆக அதாவது 5.56 பங்காக உயர்ந்துள்ளது. ஆனால் அரிசி விலை 3.3 பங்காக மட்டும் உயர்ந்துள்ளது. மின் கட்டணம், டீசல் விலை, வண்டிக் கூலி, உர விலை, வேலை ஆட்கள் கூலி எல்லாம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் வேளாண் விளைபொருட்களின் விலை அவ்வளவாக உயரவில்லை. அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களின் ஊதியம் கூட பன்மடங்கு உயர்ந்துள்ளது. வேளாண்மை லாபகரமாக செயல் பட முடியவில்லை.

    வேளாண் பொருட்களின் உற்பத்தி விலையை விட நெல் போன்ற பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை மிகக் குறைவாகவே உள்ளது. காய்கறிகளுக்கோ சில சமயம் கிலோவுக்கு ரூ 1 – 2 க்கு விற்க வேண்டிய நிலை வேளாண்மக்களுக்கு. அவற்றை பரித்தெடுக்கும் செலவு கூட கிடைப்பதில்லை. இப்படி இருக்க இடைத் தரகர்கள், வியாபாரிகள் எந்த நிலையிலும் கொள்ளை லாபம் ஈட்டு வருகின்றனர். பஞ்சமோ, அதிக விளைச்சலோ, லாபம் எல்லாம் வியாபாரிக்கு, வேளாண்மக்களுக்கு நஷ்டம் மட்டும். வேளாண்மையை பேரழிவிலிருந்து காப்பாற்ற வேளாண் பொருட்களுக்கு நியாயமான கட்டுபடியாகும் விலை Fair Remunerative Price – FRP – வழங்க வேண்டும். உலகில் வேறெந்தத் தொழிலும் அவர்தம் உற்பத்திப் பொருளை MSP – க்கு விற்பதில்லை. வேளாண்மைக்கு மட்டும் ஏன் இந்த சாபம்?

    வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்தால் வேளாண் பெருமக்கள் சில ஆண்டுகளில் கடன் சுமையிலிருந்து மீண்டு பின் நல்ல வருமானம் பெறத் தொடங்குவர். அவர்கள் வேளாண்மையை இன்னும் செம்மைப் படுத்தியும், விரிவு படுத்தியும் செய்வதுடன், வேளாண் சார்ந்த தொழில்களிலும் முனைவார்கள். இதனால் கிராமப் புரங்களில் வேலை வாய்ப்பு பன்மடங்கு பெருகும், உணவு உற்பத்தி பெருகும், கிராமீயப் பொருளாதாரம் வெகுவாக சீரடையும். இதன் விளைவாக ஆலைப் பொருட்களுக்கும் தேவை – மார்கெட் – வெகுவாகப் பெருகும். ஆலை உற்பத்தி பன்மடங்கு பெருகி, வேலை வாய்ப்பு பெருகும். நாட்டின் பொருளாதாரம் வெகுவாக வளர்ச்சி அடைவதுடன் கிராமப்புர வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், ரேஷன் கடைகள் போன்றவை அவசியமற்றுப் போய்விடும். எல்லாரும் எல்லாமும் பெரும் காலம் வந்தால் இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகள் காணாமல் போய்விடும். கிராமப் புர வளர்ச்சியினால் அவர்களாகவே தேவையான சாலை, குடி நீர், கழிவு நீர் வடிகால், கல்வி, மருத்துவ வசதி என்று எல்லா தேவைகளையும் கேட்டுப் பெறமுடியும். அதாவது சுபீக்ஷம் அடைந்து நிலை பெற முடியும். ஆனால் உற்பத்தி பெருக அதற்கு வேண்டிய தண்ணீர், மற்றும் இடு பொருட்கள் அதிகமாகத் தேவைப் படுமே என்று சந்தேகம் எழும். ரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லிகளினால் லாபத்தை விட பெரிழப்பு உண்டாவதை உணர்ந்து வேளாண் மக்கள் அவற்றை தவிர்க ஆரம்பித்து விட்டனர். தொழு உரம், மண்புழு உரம் போன்றவற்றுக்கு வெளியிலிருந்து இடுபொருட்கள் தேவையில்லை அல்லது மிகக்குறைவு. வேளாண்மை அதிகரிக்க இவற்றின் இடுபொருட்களும் தானாகவே அதிகரிக்கும். நீரையும் சிக்கனமாக உபயோகிக்க வேளாண்மக்கள் கற்று வருகிறார்கள். இதனால் வேளாண் உற்பத்தியை பெருக்க இடர் ஏதுமில்லை.

    வேளாண்மையின் லாபமின்மைக்கு காரணமென்ன என்று ஆராய்வோம். ஆலைகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு அவற்றிர்க்கு உபயோகிக்கும் இடுபொருட்கள், செய்கூலி, சேதாரம், காவல் செலவு, இருப்பு வைத்திருக்கும் செலவு, விற்பனைச் செலவு, போக்குவரத்தில் விரயம், விற்பனைக்குப் பின் சேவை, உத்திரவாத செலவு, [Raw material cost, labour, rejections and wastages, security expenses, inventory cost, loss in transit, after sales service, warrantee cost] என்று பல நேரடி மற்றும் மறைமுக செலவுகள் கணக்கிடப் பட்டு அதன் மேல் வேண்டிய லாபத்தை சேர்த்து விற்பனை விலை நிர்ணயம் செய்யப் படுகிறது. அதில் நிர்வாக மேலாளரிலிருந்து சுத்தம் செய்யும் பணியாளர் வரை எல்லோருக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகள் அடங்கும். இதனால் ஆலைப் பொருட்கள் நஷ்ட விலைக்கு விற்கப் படுவதே இல்லை.

    ஆனால் வேளாண்மையிலோ உழவன் கணக்கு பார்க்கக்கூடாது என்றெல்லாம் தம் தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு உற்பத்திப் பொருளை உள்மதிப்பு தெரியாமலே கட்டுப் படியாகாத நஷ்ட விலைக்கு விற்று வருகின்றனர். விளை நிலத்தின் மதிப்பு – வாடகை அல்லது குத்தகை செலவு – அது அவர் சொந்த நிலமானாலும், முதலீட்டின் மேல் வட்டி, நில உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் செய்யும் வேலைக்கு கூலி, அதாவது தோட்ட வேலை, அறுவடை, பதப்படுத்துதல், பாக்கிங்க் செய்தல், சந்தைக்குக் கொண்டு செல்லுதல், விற்பனைச் செலவு, பயிறை ஆடு, மாடு, மற்றும் மனிதர்களிடமிருந்து காவல் செய்வது போன்ற அனைத்து வேலைக்கும் செலவிடும் நேரதிற்க்கான கூலி, சொந்த மாட்டை உழவுக்கு பயன்படுத்தும் மதிப்பு, குறைந்த பட்சம் அவற்றை பராமரிக்கும் செலவு, பண்ணைக் கழிவிலிருந்து தயாரிக்கும் எருவின் மதிப்பு, மண்புழு, பூச்சி விரட்டியின் மதிப்பு, நீரேற்றுச் செலவு, வரி முதலியன எந்தக் கணக்கிலும் வருவதில்லை. அவர்கள் நேரடிச் செலவாக, வாங்கும் விதை, உரம், பூச்சி கொல்லி, வெளி ஆட்கள் கூலியை மட்டும் கணக்கிட்டு ஒரு ஏக்கர் நெல் பயிரிட ரூ 3000 போல் தான் செலவாகிறது என்று எண்ணுகிறார்கள். நெல் விற்று ரூ 3500 வந்தாலும் லாபம் என்று கருதுகிறார்கள். தவிர எல்லா பயிரும் நல்ல விளைச்சலை கொடுப்பதில்லை. நேரம் கெட்ட மழை, வெள்ளம், வரட்சி, புயல், பூச்சி தாக்கம், வேண்டிய தருணத்தில் இடு பொருள், வேலை ஆட்கள் கிடையாமை, என்று பல காரணங்களினால் நல்ல மகசூல் எப்போதும் கிடைப்பதில்லை. அபரிமித மகசூல் காணும்போதும் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயியின் வாழ்வில் சூழ்ச்சி செய்துவிடுகிறது.

    வேளான் தொழிலாளிக்கு கூட இப்போது ஓரளவு நல்ல கூலி கிடைத்துவிடுகிறது. ஆனால் ஆலைத் தொழிலாளி போல் ஆண்டுக்கு 250 நாள் வேலை கிடைப்பதில்லை என்பதுதான் அவர்கள் பிரச்னை. ஆனால் சிறு வேளாண்மையினர் அவர்கள் சொந்த நிலத்தில் செய்யும் வேலைக்கான கூலி கூட நிலைப்பதில்லை. சொந்த நிலத்தில் செய்வதை விட மாற்றார் நிலத்தில் போய் வேலை செய்வதே மேல் என்று எண்ண வேண்டிய அவல நிலை.

    இந்நிலையில் தன் உற்பத்தியை சந்தைக்குக் கொண்டு செல்லும் வேளாண்மக்களுக்குக் கிடைக்கும் விலை உற்பத்திச் செலவை விட மிகக் குறைவாகவே உள்ளது. அவர்கள் விளைபொருட்களை ஆண்டாண்டாய் நஷ்டத்தில் விற்று கடன் சுமை அதிகரித்து, கடைசியில் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இதற்கிடையில் BT மற்றும் GM பயிர்கள் – மரபணு  மாற்றப்பயிர்கள் – அறிமுகப் படுத்தியதன் விளைவாக அவர்கள் படும் அவதிக்கு கேட்கவே வேண்டாம். ஆக வேளாண்மை ஒரு புதை குழியாகி விட்டது. இந்த வேளாண்மக்களின் படுகொலையில் வேளாண் பொருட்களை மிகக்குறைந்த விலையில் வாங்கி உண்ணும் மற்ற மக்களும் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும்.

    இயற்கை வேளாண்மைக்கு மாறுவதால் நேரடி செலவு குறையும், உற்பத்தி பெருகி நஷ்டம் குறையும். ஆனால் அப்படி செய்தும் வரவு செலவு கணக்கு பார்த்தால் நஷ்டமாகவே முடியும்.

    வேளாண்மையின் கதி இப்படியிருக்க, எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் பால் உற்பத்தி. நாம் சுதந்திரம் அடையும் போது பால் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளோம். இது எப்படி சாத்தியமானது. தனியார் தொழிலாக நிறுவன வடிவில்லாத தொழில் (unorganized sector) ஆக இருந்த பால் உற்பத்தியை நிறுவன (organized sector) வடிவில் கொண்டு வந்ததால் தான். குஜராத்தில் அமுல் பால் பண்ணையில் முதலில் செய்த முயற்ச்சி, பின்பு NDDB மூலம்  எல்லா மாநிலங்களிலும் செய்து கண்ட வெற்றிதான் அது. இதில் ஆவின்னும் அடங்கும். இந்த பால் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, அவர்களுக்கு நல்ல கறவைகள் மாடுகள் வழங்கி, பராமரிக்கக் கற்றுத் தந்து, கடனுதவி அளித்து, உற்பத்தியாகும் பாலை அவர்களே நல்ல கட்டுப்படியாகும் விலைக்கு கொள் முதல் செய்து, பதப்படுத்தி, பாக்கெட் செய்து, நேரடி விற்பனை செய்து வருவதால் இன்று தனியார் பண்ணைகளை விட குறைந்த விலையில் பாலை விற்றும், உற்பத்தியாளர்களுக்கும் நல்ல கணிசமான விலை கிடைக்க வழிசெய்திருக்கிறது.

    இதுபோல் வேளாண் பொருட்களுக்கும் கூட்டுறவு சங்கம் அமைத்து, அவர்களை உறுப்பினராக்கி, வேண்டிய விதை, உரம், பூச்சி விரட்டி, கருவிகள், கடனுதவி, அறிவுறை வழங்கியும், பயிரை காப்பீடு செய்தும், உற்பத்திப் பொருளை நல்ல நியாயமான கட்டுப் படியாகும் விலை FRP – ஏற்படுத்தி அளித்து, கொள்முதல் செய்து, பதப்படுத்தி, நேரடி விற்பனைக் கூடங்கள் அமைத்து, விற்பனை செய்தால், ஒரு வேளாண் புரட்சியே நடந்தேரும். தற்போது அரசாங்கத்தின் வேளாண் துறை மற்றும் FCI செய்துவரும் பணிகளை கூட்டுறவு சங்கங்கள் மேற்கொண்டால் பால் உற்பத்தியில் நிகழ்ந்த புரட்சி வேளாண்மையிலும் நிகழ்வது திண்ணம்.

    இப்படி செய்தால் தனியார் துறையிலுள்ள வேளாண் பொருள் வியாபாரம் முற்றிலும் சங்கத்தின் கட்டுப்பாட்டில் வரும். இப்புரட்சியினால் ஆரம்பத்தில் உணவுப் பொருட்களின் விலை வெகுவாக உயரும். இதன் தொடர்சியாக வேளாண் மற்றும் அனைத்து தொழிலாளர்களின் ஊதியமும் உயர்த்தப் பட வேண்டிவரும். மீண்டும் பொருட்களின் விலை உயரும். ஆனால் சிறிது காலத்தில் வேளாண் பொருட்களுக்கும் மற்ற பொருட்களுக்கும் ஒப்பிட்ட ஈட்டு விலை price parity ஏற்பட்டு சமுதாய நியாயம் social justice  ஏற்பட்டு நிலைக்கும். தற்போது இந்த ஒப்பிட்ட ஈட்டு விலை இல்லாததுதான் முக்கியமான பிரச்சினை. இந்த ஒப்பிட்ட ஈட்டு விலை ஏற்படுவதால் வேளாண் மக்கள் தற்கொலை செய்து கொண்டு மாள்வது தடுக்கப் படுவது மட்டுமின்றி கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்தலும் குறைந்து போவதுடன் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு குடியேர ஆரம்பித்துவிடுவர்.

    மத்திய அரசு நாட்டின் உற்பத்திக் குறியீட்டு வளர்ச்சி [growth in GDP] யில் வேளான்மையின் பங்கு 1.5 சதவிகிதமே ஆனாலும், மொத்த வளர்ச்சி 9 சதவிகிதமாக இருப்பதாக கூறியது. மற்றும் உற்பத்திக் குறியீட்டில் [GDP] வேளாண்மையின் பங்கு 17 சதவிகிதமே ஆயினும் சேவைதுறையின் [service sector] பங்கு 55 சதவிகிதம் என்றும் கூறியது. வேளாண் பொருட்களுக்கு மேலே கூறியது போல் நியாயமான மதிப்பு அளிக்கப் பட்டால் மற்றும் டாலரின் மதிப்பு ரூ 50 - 55 என்று கொள்ளாமல் அதன் வாங்கும் திறனாகிய [purchasing power parity – PPP – of] ரூ 10 மட்டும் என்று கொண்டால் மேற்கூறிய புள்ளி விவரங்கள் தலை கீழாக மாறிவிடும். இதை உணர்ந்தால் ஆட்சியாளர்கள் 1991 ல் செய்த பொருளாதாரப் படுகொலையை சீர் செய்ய முற்படுவர்.

    வேளாண்மையைத் தவிர கிராமப்புறங்களில் செய்யப்பட்டு வரும், சுள்ளி சேர்த்து எரிபொருளாக உபயோகிப்பது, வைக்கோல், இயற்கை எரு, பாசன நீர் போன்றவை எந்தக் கணக்கிலும் வருவதாகத் தெரியவில்லை. நாட்டின் பொருளாதாரமே மகசூலை பெறிதும் சார்ந்துள்ளது. பருவமழை பொய்த்தால் பொருளாதாரம் தொய்வடைகிறது, அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றது, ஆட்சியே கவிழ்கிறது. இவை போதாதா வேளாண்மையின் முகியத்துவம் அதற்கு அளிக்கப்படும் மதிப்பைவிட மிக அதிகம் என்று உணர.

    இன்றும் 70 சதவிகிதம் மக்கள் வேளாண்மையை நம்பி கிராமங்களில் தான் வசித்து வருகின்றனர். இவர்கள் வாக்கு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைத்து விட முடியாது. ஆனால் ஆட்சியாளர்களோ வேளாண் பெருமக்களுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல் செயல் பட்டு வருகின்றனர். நாட்டில் நகர்பு இந்தியா, நாட்டுபு பாரதம் என்று இரு பிரிவாக உள்ளது. இந்தியா வளர்ந்து வருகின்றது, பாரதம் தேய்ந்து வருகின்றது என்று ஆட்சியாளர்களே ஒப்புக் கொள்கிறார்கள். கிராமங்களின் மதிப்பை உணராத அரசியல் கட்சிகளுக்கு கிராமவாசிகள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. அவர்களாகவே அவர்களுக்குளேயே நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து கிராம மன்றம், பஞ்சாயத்து, சட்டமன்றம் மற்றும் நாடாளு மன்றத்திற்கு அனுப்பினால் கிராமப்பு பாரதத்தை அவர்களாகவே வழி நடத்திக் கொள்ள முடியும்.

    அவ்வளவு ஏன்? மேற்கூறிய படி கூட்டுறவு வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களை ஏற்படுத்தினால் ஒரு பெரிய வேளாண் புரட்சியே மலர்ந்து கிராமப் புரங்களில் மட்டும் இன்றி நகரங்களிலிலும் வசதிகள் பெருகி சுபீக்ஷம் அடைந்து நிலைபெரும். பொருளாதார நிலை உயர்வும், வளர்ச்சி பரவலாக ஏற்படுவதாலும், குற்றங்கள் குறையும் – தீவிர வாதம் உள்பட.

    இதை செய்ய நாம் அரசாங்கத்தையோ, அரசியல் வாதிகளையோ, ஏன் வானத்திலிருந்து ஒருவர் குதித்து வந்து செய்வார் என்றோ எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை. இது நம் வேளாண் மக்களே செய்யக் கூடிய ஒரு புரட்சி. 

கே. ராஜ ராஜன்.

காந்தீய சமுதாய மேம்பாட்டு முனைப்பு.

கை பேசி – 94441 60839,     மின் அஞ்சல் letsbelldcat@gmail.com,      Blog ID: prithvi-mithra.blogspot.in

No comments:

Post a Comment